டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்ஸி.. எவ்வாறு பயன்படுத்தலாம்?
ரிசர்வ் வங்கி டிசம்பர் 1 அன்று சில்லறை டிஜிட்டல் ரூபாய்க்கான முதல் பைலட்டை அறிமுகப்படுத்த உள்ளது: வாடிக்கையாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

இந்திய ரிசர்வ் வங்கி இன்று சில்லறை டிஜிட்டல் ரூபாய்க்கான முதல் டிஜிட்டல் கரன்ஸி டிசம்பர் 01 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் நாடு முழுவதும் உள்ள நான்கு நகரங்களில் தொடங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி மேலும் கூறியது.
பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற மற்ற நான்கு வங்கிகளும் விரைவில் டிஜிட்டல் வங்கி சேவையில் இணையவுள்ளன.
அதேபோல் டிஜிட்டல் கரண்ஸி முதல் கட்டமாக மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களிலும், பின்னர் அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் வங்கிகள், பயனர்கள் மற்றும் தேவைப்படும் இடங்களை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது..
டிஜிட்டல் ரூபாய் உருவாக்கம், விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றின் முழு செயல்முறையையும் சோதனை செய்வதே ரிசர்வ் வங்கியின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி டிஜிட்டல் கரன்ஸி என்பது சட்டப்பூர்வ கரன்ஸியை குறிக்கும் டிஜிட்டல் கரன்ஸி டோக்கன் வடிவத்தில் இருக்கும் என்றும், காகித நாணயம் மற்றும் நாணயங்கள் தற்போது வெளியிடப்பட்ட அதே வகைகளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கேற்கும் வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் கரன்ஸிகள் மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்களில் சேமிக்கப்படும் என்றும், டிஜிட்டல் வாலட் மூலம் பயனர்கள் டிஜிட்டல் கரன்ஸியை பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கரன்ஸி என்பது நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் அனைத்துவிதமான பணத்தின் அம்சங்களை வழங்கும் என்றும், ரொக்கத்தைப் போலவே, இது எந்த வட்டியையும் பெறாது மற்றும் வங்கிகளில் வைப்புத்தொகை போன்ற பிற பணமாக மாற்றப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



