சமீபத்தில் வெளியான அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகி உள்ளதை அடுத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சியாகிவிட்டனர். ஒரு திரைப்படத்தில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களும் கெட்ட கருத்துக்களும் ஆயிரம் மடங்கு அதிகமாக மக்களை போய் சேரும் என்ற நிலையில் இயக்குனர் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த தவறான ஒரு கருத்தை கூறி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
இதே இயக்குனர் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தை இயக்கி அதில் மோசடியாளர்களை தோலுரித்துக் காட்டியதால் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள துணிவு திரைப்படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மோசடி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பது போன்ற கருத்தை மக்கள் மத்தியில் திணித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் என்பது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்றாலும் பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி குறைந்தபட்சம் 12 சதவீதம் வருவாய் தரக்கூடிய முதலீடு என்பது தற்போது தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் தற்போது ஐந்து சதவீத முதல் 10 சதவீதம் மக்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வரும் நிலையில் இப்படி ஒரு படம் வந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதே வேண்டாம் என்று மக்கள் தொலைதூரமாக ஓட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது மிகவும் பாதுகாப்பானது என்பது மட்டுமின்றி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் ஆன செபி ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பில் இருந்து எந்த ஒரு நிறுவனமும் மோசடி செய்வதற்கு வாய்ப்பே இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறும் நிலையில் அரைவேக்காட்டுத்தனமான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒரு மாஸ் நடிகரை வைத்து இதை சொன்னன் காரணமாகத்தான் இந்த படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்லப்படும் விளம்பரத்தையும் இந்த படத்தில் கேலி செய்துள்ளனர். உண்மையில் எந்த ஒரு முதலீட்டு நிறுவனமும் தங்கள் முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது என்பது சொல்வதே இல்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே உண்மையைச் சொல்லி இருக்கும் நிலையில் அதை பாராட்ட வேண்டுமே தவிர இப்படி கேலி செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் அனைவரும் கேள்வியாக உள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மோசடி திட்டங்கள் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் அதை தோலுரிக்க துணிவு இல்லாமல் மக்கள் மத்தியில் கஷ்டப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள மியூச்சுவல் ஃபண்டை தவறாக துணிவு திரைப்படத்தில் காட்டி உள்ளதால் மிகப்பெரிய நஷ்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் தானே தவிர அஜித்துக்கும், எச் வினோத்துக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி துணிவு படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக தவறு என்பதுதான் பொருளாதார அறிஞர்களின் கருத்துக்கள் உள்ளன. மிக அரிதாக நடக்கும் ஒரு சில முறைகேடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒட்டு மொத்த மியூச்சுவல் ஃபண்டும் மோசடியானது என்பது போல் எச் வினோத் காட்டி இருப்பது உண்மையில் கண்டனத்துக்குரியது.
ஆனால் அதே நேரத்தில் வங்கிகள் அடிக்கும் மினிமம் பேலன்ஸ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் போன்ற கொள்ளைகளை துணிவுடன் கூறிய எச்.வினோத்துக்கு பாராட்டுக்கள். வங்கியில் நடக்கும் மோசடிகளை மட்டும் காட்டிவிட்டு அவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு சேமிப்பு அதிகரிக்க அதிகரிக்க தான் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும். இதை மனதில் வைத்து அஜித் மட்டும் எச் வினோத் இதற்கு விளக்கம் அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



