இன்று முதல் வங்கி லாக்கர் விதிமுறைகள் மாற்றம்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

 





நம்மிடம் உள்ள நகைகள் உள்பட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக வங்கி லாக்கர்களில் எடுத்து வைத்திருப்போம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி ஜனவரி1, 2023 முதல் அதாவது இன்று முதல் வங்கி லாக்கர் குறித்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.


எனவே வங்கி லாக்கர் எடுத்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய வாடிக்கையாளர்களின் ஒப்பந்தங்களை ஜனவரி 1 முதல் புதுப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எனவே நீங்கள் ஒரு லாக்கர் வாடிக்கையாளர்களாக இருந்தால் உடனடியாக புதிய ஒப்பந்தத்தை செய்து அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என்பது முக்கியமாகும். வங்கி லாக்கர் எடுக்கும்போது வங்கிக்கு உங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் செய்யப்படும். அந்த ஒப்பந்தம் நேற்றுடன் காலாவதி ஆகி விட்டதால் இன்று முதல் புதிய ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனவரி 1-ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் செய்திகள் அனுப்பி உள்ளன. அந்த செய்தியில் உடனடியாக உங்கள் கிளைக்கு சென்று திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது என்பது ஒரு கடினமான பணி அல்ல. ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டிய பணி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். லாக்கருக்கு விண்ணப்பிக்கும்போது வங்கி, வாடிக்கையாளரின் விண்ணப்பத்தை ஒப்புக்கொண்டு ஒரு லாக்கரை ஒதுக்குகிறது. அல்லது லாக்கர் இல்லை எனில் அவருக்கு காத்திருப்பு பட்டியல் என்ணை தருகிறது.


லாக்கர் எடுக்கும் வாடிக்கையாளர் அதே வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்கனவே வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்து இருந்த ஒருவர் பரிந்துரை செய்தால் போதும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் லாக்கர் எடுக்கும் போது ஒருவருட வாடகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். 


லாக்கர்களை எடுக்கும்போது கேஒய்சி ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். லாக்கர் எடுப்பதற்கான விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பமிட்ட ஒப்பந்த ஆவணம் ஆகியவற்றை பூர்த்தி செய்து ஒரு ஆண்டுக்கான லாக்கர் வாடகையை முன்கூட்டியே செலுத்தினால் நமக்கென ஒரு லாக்கர் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தம், ஒரு முத்திரை தாளில் பதிவு செய்திருக்க வேண்டும். அதில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டு இருக்க வேண்டும் என்பதும் ஒரு நகலை வாடிக்கையாளரும் இன்னொரு நகலை வங்கியும் வைத்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி பாதுகாப்பு பெட்டகங்கள் அமைந்துள்ள வங்கி திடீரென தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கட்டிடம் இடிந்து சேதம் ஏற்பட்டாலோ அல்லது திருட்டு கொள்ளை ஆகியவை சம்பவம் சம்பவம் ஏற்பட்டாலோ வாடிக்கையாளருக்கு தகுந்த இழப்பீடு தருவதை உறுதி செய்கிறது. இதற்கான விதிகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.


மேலும் வங்கி வாடகையை முறையாக செலுத்தாவிட்டால் வாடிக்கையாளர் வங்கி லாக்கரில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதும், தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வாடகை செலுத்தாமல் இருந்தால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 லாக்கரில் சட்டவிரோதமான பொருள் அல்லது அபாயகரமான பொருட்களை வைக்கக்கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் உள்ள பகுதியை கவனித்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு வங்கிதான் என்பதையும் புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 


மேலும் பொருட்கள் வங்கி ஊழியர்களால் மோசடி செய்யப்பட்டாலோ அல்லது லாக்கரில் வைத்திருந்த பொருள் தொலைந்து போனாலோ வங்கி முழு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்ற புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் நிலநடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை பேரழிவு அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்தால் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் வங்கி பொறுப்பு ஏற்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்