தொலைக்காட்சிகளில் வரும் மியூச்சுவல் ஃபண்டு விளம்பரத்தில் 'திட்டம் தொடர்பான ஆவணங்களை படித்துக் கொள்ளுங்கள்’ என கூறப்பட்டிருக்கும். அதேபோல் செய்தித்தாளில் வரும் மியூச்சுவல் ஃபண்டு விளம்பரத்திலும் மிகவும் சின்ன எழுத்தில் இந்த வரிகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பான ஆவணங்கள் என்றால் என்ன? அது என்ன தகவல்களைக் கூறுகின்றன என்பது தற்போது பார்ப்போம். பொதுவாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது மூன்று முக்கிய ஆவணங்கள் உள்ளன என்பதை முதலில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியத் தகவல் ஆவணம் (KIM), திட்டத் தகவல் ஆவணம் (SID) மற்றும் கூடுதல் தகவல் அறிக்கை (SAI) ஆகிய இந்த மூன்று முக்கிய ஆவணங்கள் ஒவ்வொருவரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் படிக்க வேண்டும்.
இதில் உள்ள குறிப்புகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அந்த முதலீடு நமக்கு ஏற்றதா? என்பதை முடிவு செய்த பின்னர்தான் முதலீடு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்ட் மீதான ஒரு குறிப்பிட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு அந்த திட்டத்தின் ஒப்புதலுக்காக செபி அமைப்பிடம் சமர்ப்பிக்கப்படும். செபி அந்த திட்டங்களை ஆய்வு செய்து அனுமதி தந்த பின்னரே அந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஆவணத்தில் உள்ள முக்கிய தகவல்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
SID-யில் உள்ள முக்கிய தகவல்கள்
* முதலீட்டு நோக்கம் மற்றும் கொள்கைகள், சொத்து ஒதுக்கீட்டு வடிவம், கட்டணங்கள் மற்றும் பணமாக்குதல் விதிகள் போன்ற அனைத்து அடிப்படை அம்சங்கள்.
* நிதி மேலாண்மைக் குழுவின் விவரங்கள்
* திட்டத்தில் உள்ள அனைத்து ரிஸ்க் காரணிகள் மற்றும் ஆபத்துக் குறைப்பு வழிமுறைகள்.
* விற்பனைக் கட்டணங்கள், திட்டம் மற்றும் விருப்பத்தேர்வுகள், கடந்தகால செயல்திறன், அளவுகோல் போன்ற திட்ட விவரங்கள்.
* யூனிட் ஹோல்டரின் பொதுவான தகவல்.
* AMC கிளைகளின் பட்டியல், முதலீட்டாளர் சேவை மையங்கள், ஏற்பதற்கான அதிகாரப்பூர்வ மையங்கள் போன்ற பிற விவரங்களின் பட்டியல்.
SAI -யில் உள்ள முக்கிய தகவல்கள்
* மியூச்சுவல் ஃபண்டின் கட்டமைப்பு - ஸ்பான்சர்கள், சொத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் அறங்காவலர்கள்.
* AMC மற்றும் பதிவாளர்கள், பாதுகாவலர்கள், வங்கி அதிகாரிகள், தணிக்கையாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் போன்ற அசோஸியேட்டுகளின் அனைத்து தகவல்கள்.
* அனைத்து நிதி மற்றும் சட்டப் பிரச்சினைகள்.
மேலும் விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் KIM என்பது SID -இன் சுருக்கமான பதிப்பு ஆகும். அதன் பெயருக்கு ஏற்றாற்போல, ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக முதலீட்டாளர் அறியவேண்டிய அனைத்து முக்கியத் தகவல்கள் இதில் இருக்கும். ஒவ்வொரு விண்ணப்பப் படிவத்துடனும், KIM கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஓரிரு நாள் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்பதை மனதில் கொண்டு, இந்த விவரங்கள் அனைத்தையும் படித்து அதில் ஏதும் சந்தேகம் இருந்தால் பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பின் அதில் முதலீடு செய்யலாமா? என்பதை ஒவ்வொரு முதலீட்டாளரும் முடிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


