ஒவ்வொரு நாளும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்வதற்கு ஏற்ப இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்கிறதா? அல்லது குறைகிறதா? என்பதை சர்வதேச தங்க கவுன்சில் மட்டுமே முடிவு செய்யும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வரிகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
ஆனால் ஒவ்வொரு நாட்டின் கரன்சிக்கும் தங்கத்தின் விலைக்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது. இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தால் தங்கத்தின் விலை உயரும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவானால் தங்கத்தின் விலை குறையும்.
ஏனெனில் தங்கம் என்பது இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் ஒரு தொழில் அல்ல. தங்கம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் போது டாலரில் தான் நாம் தங்கம் வாங்க முடியும். அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிந்து இருந்தால் நாம் அதிக பணம் தர வேண்டிய நிலை ஏற்படும். எனவே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தால் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.
தற்போது கூட தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பெரிய அளவில் உயரவில்லை. ஆனால் இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கம் ஒரு கிராம் ரூ.4300 என்று இருந்த நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.5200 வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரூபாயின் மதிப்பு சரிந்தது தான்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1750 டாலரிலிருந்து 1840 டாலராக உயர்ந்துள்ளது. அதாவது வெறும் 90 டாலர் தான் உயர்ந்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கம் ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே தான் இந்தியாவில் மட்டும் தங்கம் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2022ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் சரிந்தது என்பதும் ஒரு டாலருக்கு 80 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. எனவே தங்கத்தின் விலை உயர்வுக்கும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டாலும் தங்கத்தின் விலை உயரும். இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை பாதுகாத்து வைத்துக் கொள்வார்கள். இதனால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.
பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்பவர்கள் தங்கத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்வார்கள். குறிப்பாக சமீபத்தில் இலங்கையை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி அடைந்த போது அந்த நாட்டிலுள்ள மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது தங்கள் கையில் தங்கத்தை எடுத்துக் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தங்கம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையை காப்பாற்றும் ஒரு சேமிப்பு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் உள்ளது. அவ்வப்போது சிறிய அளவில் விலை குறைந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்கம் ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6000 என உயர அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்னும் ஒரு 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய் கூட வர வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தை சேமிக்க சரியான நேரம் எது என்பதை கணக்கிட வேண்டிய அவசியமே இல்லை. தங்கம் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அதை வாங்கினால் அது ஒரு சேமிப்பு தான். தங்கம் நமது அவசர தேவைக்காக கடன் வாங்கவும் உதவும் என்பதால் தங்கத்தை பாண்டு முறையில் வாங்காமல் நகை வடிவில், நாணயம் வடிவில், தங்கக்கட்டி வடிவில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டே வர வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.









